31 October 2010

தமிழீழம் என்பது என்ன? - தமிழீழவன்

'தமிழீழம்' என்றால் ஒரு நாடா? ஒரு தேசமா? ஒரு நாட்டின் பகுதியா? ஒரு பிரதேசமா? ஒரு  அரசியல்  கோரிக்கையா? ஒரு  பிரிவினைவாத  கோரிக்கையா? ஒரு பயங்கரவாத  அமைப்பின்  கோசமா?  அல்லது அது தான் என்ன?

அது ஒரு தேசிய இனத்தின் அடையாளம். அது ஒரு நாடாக, ஒரு தேசமாக அல்லது ஒரு பிரதேசமாக எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், தமிழீழம் என்ற அடையாளத்தை அது இழந்துவிடக் கூடாது. 

1972ல் வட்டுக்கோட்டைத்  தீர்மானத்தின்  பின்  பிரபலமான  'தமிழீழக் கோரிக்கை'  1983ல்  இருந்து  ஆரம்பமான  விடுதலைக்கான  ஆயுதப் போராட்டத்தினால்  சர்வதேச  ரீதியில்  பிரபலமானது.  

2009ல் புலிகளின்  ஆயுதப் போராட்டம்  முடிவுக்கு  வந்தபின்னர்  தமிழீழம் என்பது தாயகத்தில்  ஒலிக்காத  ஒரு வார்த்தையாக மாறிவருகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பும்  சரி,  ஏனைய  தமிழ்  கட்சிகளும்  சரி, தமிழரின்  தாயகம்  தமிழீழம்  என அடையாளப் படுத்தப்படுவதை தவிர்க்கக் கூடாது. அது எமது அரசியல் கோரிக்கையின் ஆதாரம். அடையாளம். 

இந்தியாவில்  தமிழ்நாடு  எப்படி  தமிழர்களின்  அடையாளமோ  அதுபோல  தமிழீழம் இலங்கையில்  ஈழத்தமிழர்களின்  அடையாளம். அது  மாகாணசபையாக, மாநிலசபையாக  இல்லை  இல்லை  மாவட்டசபையாக  ஏன் பிரதேசசபையாக  இருந்தாலும்  கூட  தமிழீழம்  என அடையாளப் படுத்தல்  வேண்டும்.

பலவீனமாக   தாயகத்தில்  உள்ள  இன்றைய  தமிழர்  தலைமை  இதற்கு தயாராக  இருக்காது.  அது  அவர்களால்  முடியாத  ஒன்று. பலவீனமானவர்களிடமிருந்து பலமான  கோரிக்கைகளை  எதிர்பார்க்க  முடியாது. அதனால்  புலம் பெயர்  ஈழத் தமிழரும்  அவர்களின்  அமைப்புக்களும்  வெளிநாடுகளில்  அதன்  பயன்பாட்டை  தொடர  வேண்டும். 

நம்பிக்கைதான்  வாழ்க்கை. அதனால், நாமும்  நம்புவோம்.  காலம்  ஒருநாள்  மாறும். தமிழீழம்  ஒருநாள்  பிறக்கும்  தனிநாடாக.  அதுவரை  அது எதிரிகளால்  மட்டுமல்ல  நம்மவர்களாலும்  கூட கருக்கலைப்பு  செய்யப்படாமல்  காத்திட வேண்டும். 

அதன் உண்மையான  பாதுகாவலர்கள்  யார்?  எதிரிகள்  யார்??  துரோகிகள்  யார்???

சிந்தியுங்கள் தமிழர்களே!