01 November 2010

மக்களவை என்ன செய்கிறது? என்ன செய்ய வேண்டும்? - தமிழீழவன்

கடும் போக்குடைய தமிழீழ தேசியவாதிகள் வட்டுக்கோட்டை தீர்மான தேர்தல் நடாத்தினார்கள். பின்னர் மக்களவைக்கான தேர்தல் பல நாடுகளிலும் நடைபெற்றது. உறுப்பினர்கள்  தெரிவு  செய்யப்பட்டார்கள். அதன்  பின்னர்  அடுத்த   கட்டம் தொடர்பாக அவர்கள் குழம்பிய நிலையில் உள்ளதாகவே தெரிகிறது.

காரணம்  நாடுகடந்த  தமிழீழ  அரசின்  உருவாக்கம். அதனால்  ஏற்பட்ட ஒரு தடுமாற்றம். சரியான  ஒரு  ஆலோசனையை  அவர்கள் பெறவில்லையோ எனத்  தோன்றுகிறது.

புலிகளின் மென்மைப் போக்குடையோர்களின் உருவாக்கம்தான் நாடுகடந்த தமிழீழ அரசு. கடும்  போக்குடையோரின்  உருவாக்கம்தான்  மக்களவை. இரண்டும்  ஈழத்  தமிழர்களின்  விடுதலைக்கான  இரட்டைக் குழல்  துப்பாக்கியாக  செயற்பட  வேண்டும். அதுவே ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்பு.

ஒருவரின்  போராட்டம்  தோல்வி  அடையும்  போது  மற்றவர்  தொடரலாம். ஒருவர்  வழி  தவறும்  போது மற்றவரைப்  பார்த்து  திருந்தவும்  அல்லது  மக்களால்  ஒதுக்கவும்  முடியும்.  அதுதான்  ஜனநாயகத்தின்  வலிமை.

ஆகவே, பல  நாடுகளிலும்  தனித்தனியாகச்  செயற்படும்  மக்களவைகள் ஒன்று  சேர  வேண்டும். அவையும்  நாடு  கடந்த  தமிழீழ  அரசு  போல  ஒரு பலமான  அமைப்பாக  உருவாக  வேண்டும்.  [போட்டி அமைப்பாக அல்ல.] இது  எப்படிச்  சாத்தியமாகும்?  மிகவும்  இலகுவானது.

சகல நாடுகளில் செயற்படும் மக்களவைகளும் ஒரு பிரிவினரின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருவதாகத் தெரிகிறது. ஆகவே,  அவற்றை  ஒன்று  சேர்ப்பது சிரமமானது அல்ல.

 நாடு  கடந்த  தமிழீழ  அரசு  போல   ஒரு சட்டப் பேரவையாக அது உருவாக்கப்படலாம். அதனை   'தமிழீழ மக்களவை' [People's Council of Tamil Eelam (PCTE)]  என்றோ  அல்லது 'தமிழீழ தேசிய சபை'  அல்லது 'தமிழீழ தேசிய பேரவை'  [National  Council  of  Tamil Eelam (NCTE)]  என்றோ பெயரிடலாம்.

அது பிரதமர் மற்றும் அமைச்சரவையைக்  கொண்டிராமல்  ஐக்கிய  நாடுகள்  சபை போல  மக்களவையின்  சகல நாட்டுப்  பிரதிநிதிகளையும்  பிரதிநிதித்துவப்படுத்தும்  ஒரு அமைப்பாக அமையலாம்.

பிரதமருக்குப்  பதிலாக  செயலாளர் நாயகம் பதவியும்  ஐரோப்பிய  நாடுகளில் உள்ளது போல  அமைச்சர்  அல்லாது  செயலாளர்கள்  நியமிக்கப்படலாம்.     

இது நாடு  கடந்த  தமிழீழ  அரசுக்கு  மாற்றீடாகவும்  இருக்கும்; வித்தியாசமாகவும்  இருக்கும். ஏன் மக்களவையினர் இதுபற்றி சிந்திக்கக்கூடாது.

 நாடு  கடந்த  தமிழீழ  அரசு  தமது செயற்பாட்டை அமெரிக்காவை தளமாகக் கொண்டுதான்  செயற்படப்  போகிறது. அது  இந்தியாவின்  உதவியையும் எதிர்பார்க்கிறதாகத்  தெரிகிறது. ஆனால், ஈழத் தமிழருக்கு  இந்தியா  ஒரு  நட்பு நாடு அல்ல.

மக்களவை  ஐரோப்பிய  நாடுகளை  மையப்படுத்திச்  செயற்படலாம். சரியான சுயநலமில்லாத  ஆலோசகர்களை  முதலில்  அவர்கள்  அடையாளம்  காண வேண்டும். 

புலிகளின் பெருமளவு வெளிநாட்டு செயற்பாடுகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்  மக்களவையினர்  நாடு  கடந்த  தமிழீழ  அரசுக்கு  எதிரான  செயற்பாட்டுக்கு  தமது  வளத்தை  பயன்படுத்தாது  இலங்கை  அரசால்  இராணுவ  ரீதியாகத்  தோற்கடிக்கப்பட்ட  எமது  விடுதலைப்  போராட்டத்தை  இராஜ தந்திர  ரீதியாக  வெற்றிகரமாக  முன்னெடுக்க  வேண்டும் என்பதுவே  மக்களின்  எதிர்பார்ப்பு. 

செய்வீர்களா போராளிகளே??  

No comments:

Post a Comment